கொட்டி தீர்த்த கனமழை குமரியில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்


கொட்டி தீர்த்த கனமழை குமரியில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
x
தினத்தந்தி 17 Oct 2021 10:05 PM GMT (Updated: 2021-10-18T03:35:34+05:30)

குமரி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொட்டி தீர்த்த கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்றுமுன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் பேச்சிப்பாறையில் 21 செ.மீ. பதிவானது.

ஏற்கனவே அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது பெய்த தொடர் மழையால் ஒரே நேரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, சிற்றார் அணை போன்ற அணைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இதனால் திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளம் சிறுவர் நீச்சல் குளத்தையும், அருகில் உள்ள கல் மண்டபத்தையும் மூழ்கடித்தபடி செல்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளி ஆறு, கோதையாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருமனை, களியல் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருமனை-களியல் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தவர்களை தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகளில் சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர்.

பஸ் போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம், வெட்டுமணியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் சென்னித்தோட்டம் பகுதியில் ஆற்றுவெள்ளம் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்தனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தலம் வரை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியது.

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. தேங்கிய மழைநீரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, தென்காசியிலும் மழை

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் தொடர்மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழை காரணமாக குற்றாலத்தில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் வயலில் வெள்ளம் சூழ்ந்ததால் 1,200 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன.

Next Story