தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதல் தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை மும்முரம்


தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதல் தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 17 Oct 2021 10:59 PM GMT (Updated: 17 Oct 2021 10:59 PM GMT)

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை மும்முரம் அடைந்துள்ளது. மக்கள் கூட்டத்தில் கொள்ளையர்கள் புகுந்தால் அடையாளம் காட்டும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

சென்னை,

தித்திக்கும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்துக்கள் இப்பண்டிகையை புத்தாடை அணிந்து உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவது வழக்கம். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் திரும்பிய திசை எல்லாம் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.

கண்காணிப்பு கேமராக்கள்

தீபாவளி ஷாப்பிங் கூட்ட நெரிசலில் மக்களோடு மக்களாக சமூக விரோதிகள் புகுந்து ‘பிக்-பாக்கெட்’, ‘வழிப்பறி’, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். எனவே சென்னை தியாகராயநகர் பகுதி முழுவதும் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெருவில் 60 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது புதிதாக 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜவுளி, வணிக நிறுவனங்களில் வெளியே உள்ள கேமராக்கள் போலீசார் அறிவுறுத்தலின்படி மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதன் தெருவில் 4 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளனர். இதில் சுழற்சிமுறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் சார்பிலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

‘பேஸ்-ஆப்’ தொழில்நுட்பம்

தீபாவளி பண்டிகை நெருங்க, நெருங்க ஜவுளி உள்பட பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் போலீசார் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளனர். அதன்படி தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள போலீஸ் கண்காணிப்பு மையம் தற்காலிக கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட உளளது. இதே போன்று மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் இடத்தில் சிறிய கட்டுப்பாட்டு அறையையும் திறக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீசார் கண்காணிக்க உள்ளனர். தீபாவளி பண்டிகை காலத்தின் போது ‘பேஸ்-ஆப்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை போலீசார் கையாள்வார்கள். அதாவது, ‘பிக்-பாக்கெட்’, வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிக்கிய பழைய குற்றவாளிகள் புகைப்படம் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே பழைய குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் புகுந்துவிட்டால் கண்காணிப்பு கேமராவில் காட்டி கொடுத்துவிடும். கம்ப்யூட்டரில் ‘பீப்’ சத்தம் ஒலிக்கும். கொள்ளையர் முகம் வட்டமிட்டு காட்டப்படும். இதன் மூலம் போலீசார் கொள்ளையர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியும். இந்த ஆண்டும் இந்த நவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. பழைய குற்றவாளிகள் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை தியாகராயநகரில் 10 இடங்களில் மக்கள் பார்வையில் படும்படி போலீசார் வைக்க உள்ளனர்.

இதேபோன்று புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட கடை வீதி பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர்.

Next Story