சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 17 Oct 2021 11:05 PM GMT (Updated: 17 Oct 2021 11:05 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஒரே நாளில் 45 நாய்கள் உயிரிழந்ததாக செய்திகள் வந்தது. இதையடுத்து நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ், ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் கால்நடை பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் இருந்துள்ளது. தன்னார்வலர்களால் வளர்த்து பாதுகாக்கின்ற பணியை ஐ.ஐ.டி. நிர்வாகம் ஏற்று, இதை கண்காணிக்க குழு அமைத்து மாதந்தோறும் கவனித்து வருகிறது. இந்த வளாகத்தில் 10 ஆயிரத்து 600 சதுர அடியில் 2 கொட்டகை அமைத்து 9 நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவு, அவற்றைப் பராமரிக்கிற பணிகளை செய்து வருகின்றனர்.

87 நாய்கள்

இங்கு இருந்த நாய்களில் 14 நாய்கள் வெறித்தனம் இல்லாத வகையில் இருந்ததால் அவை வெளியில் விடப்பட்டிருக்கிறது. கடந்த ஓரு ஆண்டில் 56 நாய்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளர்ப்பதற்கு கேட்பவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பட்டியலை கேட்டிருக்கிறோம். இங்கிருந்து 2 நாய்கள் தப்பித்து ஓடியுள்ளது. 87 நாய்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 56 நாய்கள் இறப்பிற்கான காரணம் கேட்டபோது, உடலில் ஏற்படும் நோய் காரணமாகவும், முதுமை நிலையில் 9 ஆண்டுகள் கடந்த நிலையில் இறந்துள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வுக்கு கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடற்கூராய்வு முடிவு வந்தபிறகு, நாய்கள் இறந்ததற்கான உண்மைத்தன்மை தெரியவரும்.

இரண்டுமே உயிர்தான்...

இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குநர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லும் காரணம், இந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் 200 மான்கள் இருக்கின்றன. அதில் ஒரு அரிய வகை மானும் இருக்கிறது. இதில் குட்டி மான்களை வேட்டையாடுவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதற்கான புகைப்படம், வீடியோ போன்ற ஆதாரங்களை காண்பித்தார்கள். மான்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

நாயும், மானும் இரண்டுமே உயிர்கள்தான். 2 உயிர்களையும் ஒரே மாதிரி பராமரிக்க சொல்லியிருக்கிறோம். கடந்த 2018-ம் ஆண்டு 92 மான்கள் இறந்திருக்கின்றன. அதில் 55 மான்கள் நாய்கடித்து இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின்படி, இங்கு புதிதாக வருகிற நாய்களைப்பற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.யில் புதிதாக நாய் வந்ததை மாநகராட்சியிடம் தெரிவித்தால், பராமரிப்போம் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story