கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி


கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 17 Oct 2021 11:41 PM GMT (Updated: 17 Oct 2021 11:41 PM GMT)

கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டன.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கவிபாரதி நகரை சேர்ந்தவர் பாலகுரு. ஆசிரியர். இவருடைய மகன் பாலாஜி (வயது38). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி சுந்தரி, மகள் ரிஷிவந்திகா, மகன் ரக்சன் (10) ஆகியோருடன் கத்தார் நாட்டில் வசித்து வந்தார்.

பாலாஜி கடந்த 8-ந் தேதி வார விடுமுறையையொட்டி அந்த நாட்டில் உள்ள கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

அப்போது கடலில் சிக்கி தவித்த ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்ற பாலாஜியை அலை இழுத்து சென்றது. அவரை காப்பாற்றுவதற்கு ரக்சனும் கடலில் இறங்கினார். இந்த நிலையில் தந்தையும், மகனும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை கடற்கரையில் இருந்து பார்த்த பாலாஜியின் மனைவி சுந்தரி மற்றும் மகள் ரிஷிவந்திகா ஆகிய இருவரும் கதறி துடித்தனர்.

சொந்த ஊரில் தகனம்

கத்தாரில் கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் சொந்த ஊரான கும்பகோணம் கொண்டுவர இரு நாட்டு தூதரகங்கள் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி உடல்கள் விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து நேற்று காலை கும்பகோணம் கவிபாரதி நகருக்கு கொண்டு வரப்பட்டது.

இருவருடைய உடல்களும் அருகே உள்ள மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

Next Story