தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2021 11:43 PM GMT (Updated: 17 Oct 2021 11:43 PM GMT)

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 27 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மீண்டும் கனமழை

அதேபோல், நாளை மறுதினம் (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

21-ந்தேதி (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'பாபநாசம் 27 செ.மீ., பேச்சிப்பாறை 22 செ.மீ., சிற்றார் 20 செ.மீ., பெருஞ்சாணி அணை 11 செ.மீ., மணிமுத்தாறு, சுருளக்கோடு தலா 10 செ.மீ., மேட்டூர், சின்னக்கல்லாறு தலா 9 செ.மீ., சோலையாறு 8 செ.மீ., மயிலாடி, அம்பாசமுத்திரம், வால்பாறை தலா 7 செ.மீ., ஆய்க்குடி, தென்காசி தலா 6 செ.மீ., நாகர்கோவில், கொட்டாரம், துறையூர், செங்கோட்டா, பூதப்பாண்டி, கோவை அவுஸ் தலா 5 செ.மீ.' உள்பட பல இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

Next Story