வெள்ளைக்கொடி காட்டும் சசிகலா...! இறங்கி வருவார்களா அ.தி.மு.க தலைவர்கள்...!


வெள்ளைக்கொடி காட்டும் சசிகலா...! இறங்கி வருவார்களா  அ.தி.மு.க தலைவர்கள்...!
x
தினத்தந்தி 18 Oct 2021 6:25 AM GMT (Updated: 18 Oct 2021 6:25 AM GMT)

தற்போதைய அ.தி.மு.க தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் சசிகலா.

சென்னை:

நெருக்கடியான நேரத்திலும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்து சென்றதாகவும், ஒற்றுமையாக இருந்து மீண்டும் நமது ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் சசிகலா தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு பொன் விழாவையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் சசிகலா நேற்று கலந்து கொண்டார்.

அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட காரில் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு வந்த சசிகலா, அதன் வெளியே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து எம்‌.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் நினைவு பரிசுகளையும், விருதுகளையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து நினைவு இல்லத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்ட அவர், எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய ‘அம்பாசிடர்’ காரை பார்வையிட்டு அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். இதைத்தொடர்ந்து நினைவு இல்லத்தில் இருந்தபடி தொண்டர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியின்போது, எம்.ஜி.ஆர். பேரன் குமார் ராஜேந்திரன் எழுதிய ‘எனக்கு மட்டும் தெரிந்த எம்.ஜி.ஆர்.’ என்ற புத்தகத்தை சசிகலா வெளியிட்டார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகிகள் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்‌.ஜி‌.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு நேற்று சசிகலா சென்றார். அங்கு எம்.ஜி.ஆரின். வளர்ப்பு மகள் சுதா, சசிகலாவுக்கு இளநீர் வழங்கினார். அங்கிருந்த தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் நினைவு மண்டபத்தில் இருந்த படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அ.தி.மு.க.வின் பொன் விழா மலரை சசிகலா வெளியிட எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் லதா ராஜேந்திரன் பெற்று கொண்டார். அப்போது தொண்டர்கள் வீர வாளை பரிசாக வழங்கினார்கள்.

தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுடன் சசிகலா அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

முன்னதாக அங்கு நடந்த விழாவில் சசிகலா பேசியதாவது:-

எதிர்தரப்பில் என்னை ஒருவர் தரக்குறைவாக பேசியதாக குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் நமது தொண்டர் ஒருவர் பேசினார். அவர்கள் செய்யும் தவறை நாம் செய்யக்கூடாது. உண்மையான தலைவர் வழி வந்த அம்மாவை பின்பற்றிய தொண்டர்கள் அடுத்தவர்களை புண்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். இனிமேல் பொதுக்கூட்டங்களில் பேசும்போது கூட யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்.

கழகத்தின் பொன் விழா ஆண்டு தொடக்க நாளில் எம்.ஜி.ஆர். கொடி ஏற்றி வைத்து ராமாபுர தோட்டத்தில் பொன் விழா மலரை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் வீடு, தி.நகரில் அலுவலகமாக இருந்ததால் நிகழ்ச்சியை நடத்தினார் இங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நானும் ஒரு தொண்டன் என்று எம்.ஜி.ஆர். எப்போதும் சொல்வார். இதனால் தொண்டர்கள் இருந்து நடத்தும் நிகழ்ச்சி சிறப்பாக அமையும். இதனால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

‘கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா’... என்று அப்போது எம்.ஜி.ஆர். பாடிய பாட்டு. இது யாருக்கு பொருந்தும் என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன். அ.தி.மு.க. என்ற ஆலமரத்திற்கு எம்.ஜி.ஆர். விதையாக இருந்தார். ஜெயலலிதா மழையாக பொழிந்தார். அதனால்தான் கழகம் விருட்சமாக வளர்ந்தது.

கழகத்திற்கு பொன் விழா ஆண்டு. ஆட்சி கட்டிலில் இருந்திருந்தால் கழகத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., கழகத்தை காத்த ஜெயலலிதாவிற்கும் எவ்வளவு பெருமையாக இருந்து இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோது கூட கழகத்தை ஆட்சி கட்டில் அமர வைத்துவிட்டு தான் சென்றேன். தேர்தலில் நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று உங்களுக்கு தெரியும். என்னால் இந்த இயக்கத்திற்கு எள் முனை அளவு கூட பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன்.

கழகம்தான் நமக்கு கோவில். எம்.ஜி.ஆர். தியாகத்தினாலும் ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்து உள்ள கழகத்தை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒற்றுமை தான். நீர் அடித்து நீர் விலகாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் தான் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விட்டது.


மக்கள் நலனிலும், தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவி இருந்தாலும் தூக்கி வீசப்படுவோம் என்ற உண்மையை உணர வேண்டும். கழகத்திற்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கட்சி பிளவுபட்டது. அந்த சமயத்தில் ராமாபுரம் தோட்டத்திற்கு என்னை ஜானகி அழைத்து ஒரு நல்ல முடிவு ஏற்பட்டது. கட்சி ஒன்று சேர வேண்டும் என்று செய்து தந்தார். மக்களின் ஆதரவுடன் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

இந்த பேச்சு மூலம்  தற்போதைய அ.தி.மு.க தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் சசிகலா. ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பலர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.

Next Story