ரூ.400 கோடியில் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி சிக்னலில் மேம்பாலம்


ரூ.400 கோடியில்  இந்திராகாந்தி  ராஜீவ்காந்தி  சிக்னலில் மேம்பாலம்
x
தினத்தந்தி 18 Oct 2021 5:22 PM GMT (Updated: 18 Oct 2021 5:22 PM GMT)

ரூ.400 கோடியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சிக்னலில் 2 ஆண்டுகளில் மேம்பாலங்கள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி
ரூ.400 கோடியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சிக்னலில் 2 ஆண்டுகளில் மேம்பாலங்கள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெருக்கடி

புதுவை நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. போதிய சாலை வசதி, மேம்பாலங்கள் இல்லாததால் இந்த நெருக்கடி உருவாகிறது.
அதிலும் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி சிக்னல்கள் பகுதிகள் புதுவை நகரில் மிக முக்கிய பகுதிகளாக உள்ளன. புதுவை நகருக்குள் வரும் வாகனங்கள், நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

மேம்பாலங்கள்

கிழக்கு கடற்கரை சாலை 100 அடி ரோட்டில் அமைந்துள்ள இந்த சிக்னல்களை கடந்து செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த இரு இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக உள்ளது.
புதுவையில் எந்த ஆட்சி அமைந்தாலும் இந்த இரு பகுதியிலும் மேம்பாலம் அமைக்கப்படும் என்பதை தவறாமல் அறிவித்து விடுவார்கள். ஆனால் செயல்பாடுதான் இல்லை. 
இதற்கிடையே 2 சிக்னல்களிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அரும்பார்த்தபுரம் மேம்பால திறப்பு விழாவின்போது மத்திய சாலைப்போக்குவரத்து மந்திரி அறிவிப்பு வெளியிட்டார். இந்த மேம்பாலங்கள் தற்போது ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

2 ஆண்டுகளில்...

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி சிலை, இந்திராகாந்தி சிலை பகுதியில் மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இந்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
பாலம் கட்டுவதற்கு தேவையான நிதி அளிக்க மத்திய அரசு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளது. வரைபடம், திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்கி 2 ஆண்டுகளில் மேம்பாலங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.

Next Story