சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் சீமான் அறிக்கை


சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் சீமான் அறிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2021 9:29 PM GMT (Updated: 18 Oct 2021 9:29 PM GMT)

சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் சீமான் அறிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறிஞ்சி நில தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககால பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவு சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்த்தொண்டு புரிந்த அயல்நாட்டவருக்கும் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைத்து போற்றும் தமிழ்நாட்டில், தமிழ் வளர்த்த ஆதிப்பழங்குடி மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், அவர்களது சிறப்புமிக்க பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருவது திராவிட ஆட்சியாளர்களால் நிகழ்த்தபட்ட வரலாற்று பேரவலமாகும். பழந்தமிழ் குடியான குறவர்குடி மக்கள் இன்றைக்கு கல்வி, நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தபோதிலும், சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தனர் என்பதற்கு இலக்கிய சான்றாக திகழ்பவர் தமிழ்ப்பெரும்பாட்டி இளவெயினி.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும், தமிழ்ப்பழங்குடி மக்களை புறக்கணிக்காமல் அவர்களது அருஞ்செயல்களை அங்கீகரிக்க முன்வர வேண்டும். சங்ககால பெண்பாற்புலவர் இளவெயினிக்கு, மதுரை மண்ணில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story