புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா கடிதம்


புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா கடிதம்
x
தினத்தந்தி 19 Oct 2021 7:24 AM GMT (Updated: 19 Oct 2021 7:26 AM GMT)

புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொதுச்செயலாளர் என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் வி.கே. சசிகலா எழுதிய கடிதம்  என வெளியாகி இருக்கும் செய்தியில், ‘புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?’ என்றும் ‘கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம்’ என்று தொடங்குகிறது அந்த கடிதம். தொடர்ந்து, “இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்..., புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள்” என்றும், ‘காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“ஒன்றுபடுவோம்...
வென்று காட்டுவோம்..
தலைவர் புகழ் ஓங்கட்டும்...
தலைவி புகழ் நிலைக்கட்டும்...” 
பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும்.

தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது?

தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். புரட்சித் தலைவர் நாமம் வாழ்க... புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க...

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story