பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் விசாரணை குறைபாட்டால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்


பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் விசாரணை குறைபாட்டால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்
x
தினத்தந்தி 19 Oct 2021 8:16 PM GMT (Updated: 19 Oct 2021 8:16 PM GMT)

பெரும்பாலான வழக்குகளில் போலீசார் நடத்தும் விசாரணையில் குறைபாடு அல்லது தவறு இருப்பதால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

புதுச்சேரி கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்பவர் எர்லம் பெரைரா. இவர், அந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்து திருபுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி எர்லம் பெரைராவை விடுதலை செய்தது.

குழந்தைக்கு புரியவில்லை

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருபுவனை போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான புதுச்சேரி மாநில தலைமை குற்றவியல் வக்கீல் பரத சக்ரவர்த்தி, “4 வயது சிறுமி நடந்த சம்பவத்தை அப்படியே திருப்பி சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் அந்த சிறுமி சாட்சி சொல்லும்போது எல்.கே.ஜி. தான் படித்து கொண்டிருந்தது. தனக்கு என்ன நடந்தது என்றே முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள அந்த சிறுமி சரியாக சாட்சி சொல்லவில்லை என்று குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது. மேலும் மருத்துவ சான்று என்பது, குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்காகத்தானே தவிர, காயம் இல்லை என்று மருத்துவ சான்று வழங்கும்போது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது” என்று வாதிட்டார்.

பொய் புகார்

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வக்கீல், “சிறுமியின் தாயார் தன் தனிப்பட்ட விஷயத்தை ஆசிரியர் எர்லம் பெரைராவிடம் கூறியுள்ளார். அதை சிறுமியின் தந்தையிடம் ஆசிரியர் கூறியதால், பழிவாங்கும் எண்ணத்துடன் தன் மகளை கொண்டு பொய் புகார் அளித்துள்ளார். அதே பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவன் அளித்த சாட்சியத்தில், ஆசிரியர் மடியில் சிறுமி அமர்ந்து இருந்தபோது, ஒருபோதும் அழவில்லை என்று கூறியுள்ளான். எனவே, இது பொய் வழக்கு, இதை உறுதிப்படுத்தியதால்தான், ஆசிரியரை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தையின் எதிர்காலம்

சிறுமியை அவரது தாய் குளிப்பாட்டும்போது, குழந்தை கூறிய விஷயத்தை வைத்துத்தான் தாயார் புகார் செய்துள்ளார். காலதாமதமாக புகார் செய்தார் என்று கூறினாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏன் என்றால் நடந்த சம்பவத்தை தெரிந்தவுடன் போலீசிடம் போகலாமா? அப்படி போனால் தன் பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்று எந்த ஒரு தாயும் யோசிப்பாள். மேலும், வகுப்பறையில் ஒரு கதவை மூடிவிட்டு, குழந்தையை தன் மடியில் ஆசிரியர் வைத்திருப்பார் என்று பிற சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளது. அவர் குழந்தையை மடியில் வைத்திருந்தது நிரூபணமாகியுள்ளது. அதுமட்டுமல்ல எந்த ஒரு தாயும், ஒருவரை பழிவாங்க தன் குழந்தையை இவ்வாறு பயன்படுத்த மாட்டார்.

விசாரணையில் குறைபாடு

எனவே, பிற சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன். புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகளால் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடக்கூடாது. அதேநேரம் போலீசாரும் புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவில்லை. பெரும்பாலான வழக்குகளில் போலீசார் நடத்தும் விசாரணையில் ஒன்று குறைபாடு இருக்கும் அல்லது தவறு இருக்கும். இதனால், குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

சிறு தவறுகள்

எனவே, புலன் விசாரணையில் உள்ள சிறு தவறுகளுக்காக கீழ் கோர்ட்டுகள், குற்றவாளிகளை விடுதலை செய்து விடக்கூடாது. குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் வழக்கில் உள்ள ஆதாரங்களை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story