தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போடுகிறவர்கள் எண்ணிக்கை குறைவு


தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போடுகிறவர்கள் எண்ணிக்கை குறைவு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:56 PM GMT (Updated: 19 Oct 2021 10:56 PM GMT)

தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி மற்றும் போலீசாருடன் இணைந்து மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஒரே ஆயுதமான கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடும் பணியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 3 கோடியே 90 லட்சத்து 66 ஆயிரத்து 258 பேர் முதல் தவணை தடுப்பூசியும், ஒரு கோடியே 42 லட்சத்து 47 ஆயிரத்து 675 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். தமிழகத்தில் சராசரியாக இதுவரை 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 23-ந் தேதி நடைபெரும் தடுப்பூசி முகாம் மூலம் இந்த எண்ணிக்கை 70 சதவீதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக 90 சதவீதம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 90 சதவீதம் பேரும், கோவையில் 87 சதவீதம் பேரும், நீலகிரியில் 82 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக மயிலாடுதுறை, வேலூரில் தலா 57 சதவீதம் பேரும், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் தலா 54 சதவீதம் பேரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 46 சதவீதம் பேரும், சென்னையில் 44 சதவீதம் பேரும், கோவையில் 38 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக மதுரை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 17 சதவீதம் பேரும், தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டையில் தலா 16 பேரும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசியும் போட்டால் மட்டுமே கொரோனா நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

2-ம் தவணை குறைவு

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் ஏறக்குறைய 3-ல் ஒருபகுதியினரே 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போடும் நாள் வந்தும் இன்னும் போடாமல் இருக்கின்றனர். நீலகிரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 2-ம் தவணை போட்டுள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் குறைவானவர்களே 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள் விரைந்து தங்களது தடுப்பூசியை போடவேண்டும். வரும் 23-ந் தேதி நடைபெறும் 6-வது மெகா தடுப்பூசி முகாமில் 2-ம் தவணை போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story