வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 7:29 PM GMT (Updated: 20 Oct 2021 7:29 PM GMT)

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது.

தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடையாதவாறு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். வருமுன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

அனைத்து துறை அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 393.4 மில்லி மீட்டர் மழை கிடைத்து உள்ளது. இது 17 சதவீதம் அதிகமாகும். தென் மேற்கு பருவமழை காலத்தில் 34 உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 396 குடிசைகள் சேதம் அடைந்து உள்ளது. நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.

அவசர கட்டுப்பாட்டு மையம்

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை என்ற போதிலும், கடந்த 1-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 148.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. 39 உயிர் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. 78 மாடுகளும், 68 ஆடுகளும், 12 கோழிகளும் மழையால் இறந்துள்ளன.

சேப்பாக்கத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையமும் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். வானிலை ஆய்வு மைய செய்திகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீனவர்களுக்கு தெரிவித்து வருகிறோம்.

தயாராக இருக்கிறோம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1.12 லட்சம் மின் கம்பங்களும், 25 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட மின் கடத்திகளும், 8 ஆயிரம் மின்மாற்றிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

822 இடங்களில் ஆபத்தான நிலையில் வெளியில் தெரியும் கம்பி வடங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு 600 செயற்கைகோள், தொலைபேசிகளும், இதர உபகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும், டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மொத்தத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story