சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 9:02 PM GMT (Updated: 20 Oct 2021 9:02 PM GMT)

2015-ம் ஆண்டு கனமழையில் சென்னை தத்தளித்த நிலை மீண்டும் வராத வகையில், நகரம் முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டிடியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி, வீராங்கல் ஓடை, வேளச்சேரி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபபிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

மழைநீர் வடிகால்வாய்கள்

வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மழைநீர் தேங்குவதை தடுக்கவும், மழைநீர் வழிந்தோட வசதியாக 3 சிறுபாலப்பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இரண்டு பணிகளுக்காக ரூ.3.95 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

பல்லாவரம்-துரைபாக்கம் சாலையில் கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி வரை கட்டப்பட்டு வரும் பெரிய மழைநீர் வடிகால்வாய் பணி ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளான மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் ஆகிய பணிகளுக்கு ரூ.212 கோடி நிதி, முதல்-அமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் வராத வகையில்

2015-ம் ஆண்டு கனமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு சென்னை தத்தளித்ததை கருத்தில் கொண்டு, மீண்டும் அந்த நிலை வராத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில் சென்னை மாநகரம் முழுவதும் துரித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் 2 மேம்பாலங்களையும், 2010-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியிலேயே கட்ட திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் இதை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை. தற்போது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர்தான் இந்த இரு பாலப்பணிகளையும், விரைவுப்படுத்தி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story