உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு


உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 20 Oct 2021 9:10 PM GMT (Updated: 20 Oct 2021 9:10 PM GMT)

உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சுஹைல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கடந்த 13-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்துகொள்ள தகுதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்ட எனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது.

இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கும் எதிரானது. எனவே, இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story