ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வினருக்கு மோடி தமிழில் வாழ்த்து


ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வினருக்கு மோடி தமிழில் வாழ்த்து
x
தினத்தந்தி 20 Oct 2021 9:46 PM GMT (Updated: 20 Oct 2021 9:46 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க. சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 8 பேர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாகவும், 41 பேர் கிராம ஊராட்சித் தலைவர்களாகவும், 332 பேர் வார்டு உறுப்பினர்களாகவும் என மொத்தம் 381 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலனவர்கள் முதல் முறை வெற்றியாளர்கள் என தெரிகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 381 பேருக்கும் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர். அப்போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மோடி தமிழில் வாழ்த்து

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலையின் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து, மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்’ என்று கூறியுள்ளார்.

Next Story