ஐகோர்ட்டு உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை தி.மு.க. அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது


ஐகோர்ட்டு உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை தி.மு.க. அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டது
x
தினத்தந்தி 20 Oct 2021 10:04 PM GMT (Updated: 20 Oct 2021 10:04 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் முறையாக கடைபிடிக்காமல் தி.மு.க. அரசின் கைப்பாவையாக இருந்தது என்று தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை,

தமிழத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள 11 பக்க மனுவில் கூறியிருப்பதாவது:-

* ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தினால் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பு என்று நாங்கள் புகார் அளித்திருந்த போதிலும், முறைகேடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தி உள்ளனர்.

* அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள், ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைகள் ஆகிய இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதனை மாநில தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுத்தவில்லை.

* மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக, சுதந்திரமாக, நியாயமான முறையில் தேர்தலை நடத்தவில்லை. மாறாக ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து வெறும் அவர்கள் ஆட்டுவித்த பொம்மையாக இருந்துள்ளனர்.

விதிமீறல்கள்

* அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பல இடங்களில் உரிய காரணங்கள் இல்லாமல் நிராகரிக்கப்பட்டன.

* தேர்தல் நடத்திய அதிகாரிகள் தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை. அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டுள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல விதிமீறல்கள் நடந்துள்ளன.

* தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக போலீசார் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தேர்தல் அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூட்டங்கள் நடத்தி உள்ளனர். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் உடனே அறிவிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுதந்திரமான விசாரணை

* வாக்கு எண்ணிக்கையின்போது பெரியளவில் சட்டவிரோத செயல்கள் அரங்கேறி இருக்கின்றன. முதல் சுற்றில் அ.தி.மு.க. எங்கெல்லாம் முன்னிலையில் இருந்ததோ, அங்கெல்லாம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவு வரும் வகையில் வாக்கு சீட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளன.

* உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அரசு எந்திரங்கள் ஜனநாயத்துக்கு எதிரான செயல்களை செய்துள்ளன. எனவே இதுகுறித்து கவர்னர் சுதந்திரமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story