தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்


தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Oct 2021 10:25 PM GMT (Updated: 20 Oct 2021 10:25 PM GMT)

தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உணவு வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும் போது, இந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்கவேண்டும் என்று கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் சேவை வழங்காதது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை கற்றிருக்கவேண்டும் என்று அந்த நிறுவன பிரதிநிதி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றுதான். அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்ட தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இத்தகைய கொடுமைகள் இனியும் நடக்கக்கூடாது என்பது தான் தமிழக மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசு பணிகளில் 100 சதவீதமும், தனியார் தொழில் மற்றும் சேவை வழங்கும் நிறுவன பணிகளில் 80 சதவீதமும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.

அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றி பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story