பொள்ளாச்சி வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம்


பொள்ளாச்சி வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2021 4:12 AM GMT (Updated: 21 Oct 2021 7:25 AM GMT)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க அனுமதித்த 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்,

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் சேலம் மத்திய சிறையிலும், 4 பேர் கோபி கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு 9 கைதிகளும் காவல்துறை வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல்கள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கைதிகள் அனைவரும் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவன்னன், வசந்த்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் ஒரு வாகனத்திலும், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகிய 4 பேர் மற்றொரு வாகனத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வந்த வாகனங்கள் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டு, கைதிகளின் உறவினர்களை அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. 

இந்த நிலையில் கைதிகளை சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளை அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், நடராஜன், கார்த்தி உள்ளிட்ட 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

Next Story