மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்


மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்
x
தினத்தந்தி 21 Oct 2021 9:23 PM GMT (Updated: 22 Oct 2021 12:45 AM GMT)

மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடமும், உத்தவ் தாக்கரேக்கு 2-வது இடமும் கிடைத்திருப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

யாருக்கு செல்வாக்கு அதிகம்?

இந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பது குறித்து, ‘‘சி.என்.ஓ.எஸ். ஒபினியோம்’’ என்ற அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியது. அதில், நாட்டில் சிறந்த முதல்-மந்திரிகளாக 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் இடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், 2-வது இடத்தை மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கணக்கெடுப்பு நடத்திய அமைப்பு கூறியிருப்பதாவது:-

திருப்தி தெரிவித்த 79 சதவீதம் பேர்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்-அமைச்சராக திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 12 சதவீதம் பேர் அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவீதத்தில் திருப்தி இல்லை என்று கூறுபவர்களைக் கழித்து மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாக கணக்கிடப்படுகிறது.

மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்

அதன்படி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகரப் புள்ளிகள் 67 பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்-அமைச்சராக முதலிடம் பெற்றுள்ளார். மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 3-வது இடம் பெற்றுள்ளார். 4-வது இடத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும், 5-வது இடத்தை அசாம் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வா சர்மாவும் பிடித்துள்ளனர்.

இவ்வாறு சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் அமைப்பு கூறியுள்ளது.


Next Story