துரை வைகோவுக்கு பதவி வழங்கியதில் கட்சிக்குள் எதிர்ப்பா? ம.தி.மு.க.வில் குழப்பம் இல்லை வைகோ பேட்டி


துரை வைகோவுக்கு பதவி வழங்கியதில் கட்சிக்குள் எதிர்ப்பா? ம.தி.மு.க.வில் குழப்பம் இல்லை வைகோ பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 8:15 PM GMT (Updated: 22 Oct 2021 8:15 PM GMT)

ம.தி.மு.க.வில் துரை வைகோவுக்கு கட்சி பதவி வழங்கியதில் எதிர்ப்புகள் வந்துள்ளதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றும், கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதுரை,

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

துரை வைகோவுக்கு கட்சி பதவி வழங்கியதில் எதிர்ப்புகள் வந்துள்ளதாக கூறுவது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே அவர் தேர்வு செய்யப்பட்டார். 2 பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு? என கேட்டார்கள்.

தேர்தல் நடப்பதை போல வாக்குப்பெட்டி வாங்கி, ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வைகோ ம.தி.மு.க.விற்கு வரவேண்டுமென்று வாக்களித்து இருந்தனர்.

தகுதி வந்துவிட்டது

தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்று வருகிறார். அவருக்கு உயரிய பதவியை அளிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன்.

அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக் கொண்டால் நிறைய பிரச்சினைகள் வரும். நிம்மதி இருக்காது. இதையும் அவருக்கு பல முறை அறிவுரையாக கூறினேன். துரை வைகோவுக்கு தகுதி வந்துவிட்டது. மேடையில் நன்றாக பேசுகிறார். அவரது பேட்டியை பார்த்து விட்டு காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார் என்று சொன்னார்.

நடக்காது

ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. கட்சியில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளார்கள். அது கட்சிக்கு நல்லதாகவே முடியும். ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை, கட்சி வலுவாக உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story