மாநில செய்திகள்

மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை + "||" + Anti-corruption raids at 36 locations, including the home of the state Cooperative Bank chairman

மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
சேலம்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது தனித்தனியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுடைய வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் (வயது 57). இவர் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இதுமட்டுமின்றி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131 சதவீத சொத்துகள் அதிகமாக சேர்த்துள்ளது தெரியவந்தது. அதாவது, அவர்கள் ரூ.3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755-க்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வீடுகளில் சோதனை

இதைத்தொடர்ந்து மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு, தோட்டத்து வீடு, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என சேலம் மாவட்டத்தில் 17 இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

அதன்படி, புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து உடனடியாக இளங்கோவன் சேலம் விரைந்து வந்தார்.

பின்னர் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த அனைத்து அறைகள் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். சோதனையின் போது வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்தும் வீட்டுக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில ஆவணங்கள் குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாமனார், அக்காள் வீடுகள்

மேலும் இளங்கோவனின் தோட்டத்து வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை பற்றிய தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள இளங்கோவனின் மாமனார் சாம்பமூர்த்தி, அவருடைய அக்காள் ராஜகுமாரி மற்றும் நண்பர்களான வரதராஜனின் நகைக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை, ஜெயராமன் என்பவருடைய வீடு உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல இளங்கோவனின் நெருங்கிய நண்பர்களான ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், வாழப்பாடியை சேர்ந்த சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவரும், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளருமான குபேந்திரன், தம்மம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீகுமரன், சேலம் மரவனேரியில் உள்ள இளங்கோவனின் ஆடிட்டர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சேலம், நாமக்கல், கரூர், திருச்சியில் உள்ள இளங்கோவனுக்கு தொடர்புடைய 36 இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அ.தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னிக்கு வீட்டில் இருந்து வந்தவுடன் சோதனை வந்துள்ளது.
2. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன்
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
3. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - ரூ. 2.87 கோடி, 6 கிலோ தங்கம் பறிமுதல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
4. மின்சார ரெயில்களில் பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? ரெயில்வே அதிகாரிகள் சோதனை
சென்னையில் மின்சார ரெயில் பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என ரெயில்வே அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
5. வாகன சோதனையின்போது லாரி டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.