ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை; மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை; மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:13 PM GMT (Updated: 23 Oct 2021 6:13 PM GMT)

ரேஷன் கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அங்கீகார சான்றிதழ்

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளின்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும், அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவும் சட்டப்படி வழங்கப்படும் சான்றாகும். அதை போலியாக உற்பத்தி செய்வதும், கள்ளச்சந்தையில் விற்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. அந்த புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

கோ-ஆப்டெக்ஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சீபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம், கோவை பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள்,

சின்னாளப்பட்டி பட்டு, பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல், பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமக்காளம் 30 புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான காஞ்சீபுரம் பட்டுப்பாவாடை, சட்டை 50 புதிய வடிவமைப்புகள் ஆகிய ‘தமிழ்த்தறி’ என்ற தொகுப்பை முதல்-அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

காஞ்சீபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரிகையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாத அட்டையை முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

பனை வெல்லம் விற்பனை

பருத்தி நூலை உபயோகித்து தயாரிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை ரகங்கள்; கதர் கிராமத் தொழில் வாரியத்தின் புதிய ஆதிரை கலெக்சன்ஸ் வகையான அச்சிடப்பட்ட பட்டு புடவைகள், டிஜிட்டல் பிரிண்டிங் பட்டு புடவைகள், கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பட்டு புடவைகள் மற்றும் மெல்லிய ரக பருத்தி இழை புடவைகள் ஆகியவற்றையும் தமிழ்த்தறியின் ஒருபகுதியாக முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகளை வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தால் பச்சைத்தேன் பதப்படுத்தப்பட்டு அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை நவீன கண்ணாடி பாட்டில்களில் வைத்து விற்பனை செய்வதை அறிமுகப்படுத்தினார்.

பனை தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் (கருப்பட்டி) விற்பனை செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

நெசவாளர் விருது

இணையதள சேவையை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்ய tnkhadi என்ற ‘ஆண்ட்ராய்டு’ மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறையை பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2020-21-ம் ஆண்டிற்கான பட்டு ரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு கே.ஜி.கண்ணன், 2-ம் பரிசு வி.சரவணன், 3-ம் பரிசு கே.சுமதி; பருத்தி ரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு இ.ஆர். நாகலம்மாள், 2-ம் பரிசு எஸ்.ரவி, 3-ம் பரிசு என். நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

கைத்தறி துணி ஏற்றுமதியில் 2020-21-ம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை அம்பாடி எண்டர்பிரைசஸ், 2-ம் பரிசு ஈரோடு சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 3-ம் பரிசு ஈரோடு பைவ் பி வென்சர் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணி நூல் ஆணையர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வி.ஷோபனா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் த.பொ.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர், மத்திய அரசின் புவிசார் குறியீடு கட்டுப்பாட்டாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story