மாநில செய்திகள்

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி கூட்டாளியுடன் பிரபல ரவுடி வெட்டிக் கொலை + "||" + In Pondicherry, a famous rowdy and his accomplice were hacked to death by a bomb.

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி கூட்டாளியுடன் பிரபல ரவுடி வெட்டிக் கொலை

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி கூட்டாளியுடன் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
புதுச்சேரியில் பிரபல ரவுடியும், கூட்டாளியும் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் பிரபல ரவுடியும், கூட்டாளியும் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

6 கொலை வழக்குகள்

புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி என்கிற பாம் ரவி (33). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவி தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார். இந்தநிலையில்  மதியம் 3 அளவில் மோட்டார் சைக்கிளில் தனது ஆதரவாளரான வாணரப்பேட்டை முருகசாமி நகர் நேரு வீதியை சேர்ந்த அந்தோணி (28) என்பவருடன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். 
வாணரப்பேட்டை அலோன் வீதி- ராஜராஜ வீதி சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்தொடர்ந்து வந்தனர். 

வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

திடீரென்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரவியை வழிமறித்து வெடிகுண்டு வீசினார்கள். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமானது. 
உடனே சுதாரித்துக் கொண்ட ரவியும், அந்தோணியும் அந்த கும்பலிடம் சிக்கி விடாமல் இருக்க மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 
ஆனால் அந்த கும்பல் அவர்கள் இருவரையும் விடாமல் துரத்தியது. இதில் அந்தோணி சிக்கினார். அந்த இடத்திலேயே அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டித் தள்ளினார்கள்.
அதேநேரத்தில் தப்பி ஓடிய ரவியையும் துரத்திக்கொண்டு சென்றனர். ராஜராஜன் வீதியில் இருந்து காளியம்மன் தோப்பு வீதிக்கு செல்லும் ஒரு குறுகிய சந்து வழியாக ரவி தப்பிக்க முயன்றார். அப்போது மடக்கிய அந்த கும்பல் அவரையும் வெட்டித் தள்ளியது. 
கண்இமைக்கும் நேரத்தில் பாம் ரவியும், அவரது கூட்டாளி அந்தோணியும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். 

அதிர்ச்சியில் முடங்கினர்

வெடிகுண்டு வீசி கூட்டாளியுடன் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்குள் முடங்கினார்கள். கொலை வெறி தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து சென்ற பிறகே அவர்கள்வெளியே வந்து பார்த்தனர். 
அப்போது தான் நடந்த சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது. இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
கொலை செய்யப்பட்ட ரவி, அந்தோணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். வெடிகுண்டு, தடவியல் நிபுணர்கள் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

ரவுடிகளுக்குள் மோதல்

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரவிக்கு எதிரிகள் அதிகம். 
எனவே பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது ரவுடிகள் மோதலில் நடந்ததா? இதில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் 2 வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளனர். 

போலீஸ் குவிப்பு

ரவுடியான ரவி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும் கொலையுண்ட அவரது கூட்டாளியான அந்தோணி மீது எந்த வழக்கும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
உப்பளம் வாணரப்பேட்டையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவி, அந்தோணி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.