காரைக்கால் பா ம க செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது


காரைக்கால்  பா ம க செயலாளர் கொலையில்  ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 3:24 PM GMT (Updated: 25 Oct 2021 3:24 PM GMT)

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினர் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காரைக்கால்
காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினர் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெட்டிக்கொலை

காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் தேவமணி (வயது53). மாவட்ட பா.ம.க. செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தார். திருநள்ளாறு மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் கட்சி அலுவலகம் இருந்தது. 
பொது சேவைகளில் நாட்டம் மிகுந்த இவர் அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். கொரோனா காலத்தில் மதுக்கடைகளை மூடுமாறும், புதுச்சேரியில் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தியும், பா.ம.க. சார்பில் கோர்ட்டில் தேவமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். 
இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

இடத்தகராறு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேவமணிக்கும் அவரது வீட்டுக்கு எதிரே உள்ள இடம் தொடர்பாக மணிமாறன் என்பவருக்கும் அடிக்கடி அடிதடி சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இந்த தகராறில் தான் தேவமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், வீரவல்லபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லெனின் பாரதி, பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து, தேவமணியை கொலை செய்த கும்பலை தேடிவந்தனர்.

கூலிப்படையை ஏவினர்

இந்தநிலையில், கொலை நடந்த மறுநாள் முக்கிய குற்றவாளியான மணிமாறனை (28) பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். 
இதில், மணிமாறனுக்கு உடந்தையாக அவரது நண்பர்களான திருநள்ளாறு அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி (59), மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, இலுப்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54), மயிலாடுதுறை கூட்டுறவு நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண் (31) மற்றும் சார்லஸ் ஆகியோருக்கு தேவமணி கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
அதாவது இவர்கள் 5 பேரும் சேர்ந்து 6 பேர் கொண்ட கூலிப்படையினரை ஏவி தேவமணியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

4 பேர் கைது

இதையடுத்து மணிமாறன், கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் ஆகிய 4 பேரை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தேவமணி கொலையில் தொடர்புடைய சார்லஸ் மற்றும் கூலிப்படையினர் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-------

Next Story