ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் பயணம் ; தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா


ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் பயணம் ; தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா
x
தினத்தந்தி 29 Oct 2021 8:35 AM GMT (Updated: 29 Oct 2021 8:40 AM GMT)

சசிகலா இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். வழிநெடுக ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

சென்னை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை( 30ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்மரியாதை செலுத்த காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‌

இதனிடையே அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்த தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சசிகலா ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தார். அந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் சசிகலாவின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் நிராகரித்ததுடன் நீங்கள் அ.தி.மு.க. இல்லை.  ஏற்கனவே முறைப்படி வந்துள்ள அ.தி.மு.க. கடிதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு அ.தி.மு.க. பெயரில் தனியாக நேரம் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. - அ.ம.மு.க. தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, இன்று மரியாதை செலுத்தினார் சசிகலா.

முன்னதாக, தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்திருந்த அவர், தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. கொடியுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இன்று காலை 8 மணி அளவில் ஓட்டலில் இருந்து கிளம்பியவர், சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய பிரசார வாகனத்தில் கோரிப்பாளையம் வந்தார். காலை முதலே மழை பெய்த நிலையில், அ.தி.மு.க. அ.ம.மு.க. கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து ஜெயலலிதா பயன்படுத்திய, அதே பிரசார வாகனத்தில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அங்கிருந்து பசும்பொன் சென்றார்.

Next Story