நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை; தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை; தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Oct 2021 7:41 PM GMT (Updated: 30 Oct 2021 7:41 PM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

நெல்லை,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மாவட்டங்களில்நேற்றுமுன்தினம் இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த தொடர் மழை நேற்றும் நீடித்தது.

மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,480 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,405 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிகளவில் வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. ஏற்கனவே, குறுக்குத்துறை முருகன் கோவிலில் உள்ள சாமி மேல கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இருந்தாலும் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தூத்துக்குடியில் ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளம் முழுவதும் மழைநீரில் மூழ்கியது. இதனால் நேற்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரெயில் மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி செல்லும் பயணிகள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் மூலம் ஊருக்கு சென்றனர். ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நீடிக்கும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Next Story