கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Nov 2021 12:24 AM GMT (Updated: 1 Nov 2021 12:24 AM GMT)

கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்ததால், அங்கு பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.

தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் நிலையில், முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில்  உயர்மட்ட கொரோனா ஆய்வு கூட்டத்தில் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், 10 மற்றும் 12-ம் வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கேரளாவில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், மற்றும்10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், மாணவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்க, மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் முதல்-மந்திரி பினராய் விஜயன் தன்னுடைய முகநூல் பதிவில், மாநில அரசு மிகுந்த விழிப்புடன் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் பாதுகாப்பான முறையில் செயல்பட, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தயாரித்துள்ள வழிகாட்டுதல்களை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என்றார். மேலும், பள்ளிகள் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியைப் பேணவும், வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Next Story