முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக-கேரள அரசுகளை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்


முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக-கேரள அரசுகளை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2021 10:11 PM GMT (Updated: 1 Nov 2021 10:11 PM GMT)

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த 30-ந்தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தங்க கவசம்

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில், தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச்சிலையில் பொருத்தி இருந்த தங்ககவசம் எடுக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தங்ககவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் வழங்கிய இந்த தங்க கவசம், இனி அடுத்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின் போது எடு்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லை பெரியாறு விவகாரம்

இதற்கிடையே மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க. விரைவில் போராட்டம் நடத்தும். போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து நானும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்போம். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க ஜீவாதார உரிமையை ஜெயலலிதா பெற்று தந்துள்ளார். மேலும் அவர் 142 அடி வரை தண்ணீரை தேக்க அரசாணையும் வெளியிட்டார்.

மக்கள் எழுச்சியுடன்...

முல்லை பெரியாறு அணையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து 3 முறை 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. முல்லைபெரியாறு அணையால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன.

அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. கேரள அரசின் இடையூறுகளை தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கண்டும், காணாமலும் இருக்கிறது. எனவேதான் கேரளா மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து 5 மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் ஜீவாதார உரிமையை நிலை நாட்ட மக்கள் எழுச்சியுடன் அ.தி.மு.க. போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story