சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை நேசமுடன் வரவேற்ற மு.க.ஸ்டாலின்


சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை நேசமுடன் வரவேற்ற மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 Nov 2021 11:54 PM GMT (Updated: 1 Nov 2021 11:54 PM GMT)

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேசமுடன் வரவேற்றார். அப்போது அவர்களுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கி கலந்துரையாடினார்.

சென்னை,

கொரோனா தொற்று பரவல் தணிந்து வருவதையடுத்து தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களை சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது போன்று வரவேற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துவிட்டு நேற்று காலை கிண்டி வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர், கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு திடீரென்று வருகை தந்தார். மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியைகள் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் பள்ளி வகுப்பறைக்கு சென்றார். அவருக்கு மாணவ-மாணவிகள் எழுந்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

வாஞ்சையுடன் கலந்துரையாடினார்

மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு ‘சாக்லேட்’ மற்றும் நோட்டு, பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களை வழங்கி அன்புடன் வரவேற்றார்.

பின்னர் அவர் வாஞ்சையுடன் பள்ளி மாணவ-மாணவிகளின் பெயர்களை நேரடியாக கேட்டறிந்து, கல்வியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரையும், வாழ்த்துகளும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அப்போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்பட கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, தயாநிதிமாறன் எம்.பி.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த தொடக்கப்பள்ளிமாணவிகளை தொழில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் இனிப்புகள் மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

Next Story