ரூ.300 கோடி வரி ஏய்ப்பு: கால்நடை தீவன நிறுவனத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல்


ரூ.300 கோடி வரி ஏய்ப்பு: கால்நடை தீவன நிறுவனத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2021 6:59 PM GMT (Updated: 2 Nov 2021 6:59 PM GMT)

தமிழகத்தில் கால்நடை தீவனங்கள், கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், ரூ.3¼ கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து உள்ளது.

சென்னை,

கால்நடை தீவனங்கள், கோழி இறைச்சி உற்பத்தியில் மற்றும் விவசாயம், சமையல் எண்ணெய்கள் மற்றும் முட்டை பொருட்கள் ஏற்றுமதி செய்து வரும் நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 27-ந் தேதி வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு தரவு வடிவில் உள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் இந்த நிறுவனம், வருமானத்தை வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்தது. விலைப்பட்டியல் மூலம் போலி கொள்முதலுக்காக செலவு செய்ததும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்று விற்பனை மற்றும் கணக்கு புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரூ.3¼ கோடி பறிமுதல்

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பகுப்பாய்வு செய்ததில், கணக்கில் வராத வருமானம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. பல்வேறு அசையா சொத்துகளை கையகப்படுத்துதல் மற்றும் நிர்மாணிப்பதிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட தகவல்களை வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story