வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் விளக்கம்


வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 2 Nov 2021 7:09 PM GMT (Updated: 2 Nov 2021 7:09 PM GMT)

வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு தான் எதிர்வினை ஆற்றுவதாக கருதி அங்கலாய்ப்புகளின் மொத்த வடிவமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஒருமித்த வெளிப்பாடாக முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி படுகுழியில் தள்ளும் போதெல்லாம் அருகில் இருந்து ரசித்துக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்த ஞானோதயம் திடீரென்று பீறிட்டு எழுவதை பார்க்கும் போது வியப்பு மேலிட தான் செய்கிறது.

‘பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு அன்றைய மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று தனி பெரும் பெயர் தாங்கி மலர்ந்த நாளே தமிழ்நாடு நாளாக அமைவது பொருத்தமாக இருக்கும்’, என தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மு.க.ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு

அவர்களது கோரிக்கையில் புதைந்துள்ள நியாயத்தையும், கடந்த ஆட்சியில் திட்டமிட்டு செய்யப்பட்ட வரலாற்று திரிபையும் சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாளாக ஜூலை 18-ந்தேதி அமையும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார். அதேவேளை நவம்பர் 1-ந்தேதி எல்லை போராட்டத்தில் ஈடுபட்ட தியாக சீலர்களை கவுரவிக்கும் நாளாக தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

18.7.1967 அன்று தமிழக வரலாற்றின் பொன்னாள். தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் அறிஞர் அண்ணா தனித்துவம் அளித்த நாள். ஆனால் உணர்வூட்டி ஆளாக்கி வளர்த்த அண்ணாவால் அமைக்கப்பெற்ற நாளை, தமிழ்நாடு நாள் என கொண்டாடக் கூடாது என அவரது பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இருப்பவர்கள் கூக்குரலிடுவது வெட்கக்கேடானது.

தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில் இந்த அரசு எதை செய்தாலும் தெளிவுடன் சிறந்த சான்றோர்களுடன் ஆலோசித்து ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் செயல்பாடுகளை கட்சி பாகுபாடுகளைத் தாண்டி, மாநில எல்லைகளைத் தாண்டி பலரும் மனம் திறந்து பாராட்டிய வண்ணம் இருக்கிறார்கள்.

இட்டுக்கட்டி சொல்வதா?

காந்தாரி மனம் கொண்ட சிலருக்கு வேண்டுமானால் ‘வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ என குற்றம் கண்டுபிடிக்க வேண்டி இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்ல வேண்டிய தேவைகள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ் கூறும் நல்லுலகமும் ஜூலை 18-ந்தேதி தமிழ் வரலாற்றில் இடம்பெற்ற நாள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்று நாள் அதுவே என்று பெருமிதம் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story