நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்ற தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்ற தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 2 Nov 2021 11:09 PM GMT (Updated: 2 Nov 2021 11:09 PM GMT)

ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க, நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்ட தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சோவல் இந்தியா என்ற பெயரில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதால், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோய் யோங் சுக், பொது மேலாளர் சோ ஜெவோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்கள் முகாமில் அடைக்கப்பட்டனர்.

வீட்டுக்காவல்

தங்களை முகாமில் இருந்து வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து இவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இருவரையும் வீட்டுக்காவலில் வைக்க அனுமதி வழங்கியது. அதற்குரிய செலவுத்தொகையை தமிழக அரசுக்கு வழங்க இருவருக்கும் உத்தரவிட்டது.

அதன்படி இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர்கள் உள்பட 5 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக மாதம் ரூ.3 லட்சத்தை அரசுக்கு இருவரும் வழங்கி வருகின்றனர்.

தப்பிச்செல்ல திட்டம்

இந்தநிலையில் இவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் பெங்களூரு வழியாக கொல்கத்தா சென்று, அங்கிருந்து வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர்களிடம் டிரைவராக வேலை செய்பவர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி பதிவான வழக்கில், தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு சோய் யோங் சுக், சோ ஜெவோன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக மனுதாரர்கள் தொழில் செய்ய வந்துள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிரைவராக வேலை செய்யும் புகார்தாரர், மனுதாரர்களிடம் ரூ.7 லட்சம் பெற்று திருப்பித் தரவில்லை. அதை திருப்பிக்கேட்டதால், அவர் பொய்ப்புகார் செய்துள்ளார்’ என்று வாதிட்டார்.

எதிர்ப்பு

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சி.இ.பிரதாப், ‘ஜி.எஸ்.டி. மோசடியில் சிக்கிய மனுதாரர்கள், வேறு நபர்களின் ஆதார் ஆவணங்களைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்து தென்கொரியா தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சட்டத்தை மதிக்க வேண்டும்

தமிழகத்தில் 13 ஆயிரத்து 289 வெளிநாட்டவர்கள் விசா காலம் முடிந்தபின்னரும் தங்கியுள்ளனர். இந்தியாவுக்கு தொழில் செய்ய வரும் வெளிநாட்டவர்கள், இந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். மனுதாரர்கள் சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் இருக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

அப்படி ஒரு சலுகை பெற்ற மனுதாரர்கள், நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால், அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story