பழங்குடியின மாணவி ‘நீட்’ தேர்வில் வெற்றி டாக்டராகி ஏழைகளுக்கு சேவையாற்ற விரும்புவதாக பேட்டி


பழங்குடியின மாணவி ‘நீட்’ தேர்வில் வெற்றி டாக்டராகி ஏழைகளுக்கு சேவையாற்ற விரும்புவதாக பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2021 8:14 PM GMT (Updated: 3 Nov 2021 8:14 PM GMT)

கோவையை சேர்ந்த பழங்குடியின மாணவி ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். டாக்டராகி ஏழைகளுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி (வயது 19). மலசர் பழங்குடியின மாணவியான இவர், சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

பழங்குடியின மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கு 108 முதல் 137 மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சங்கவி, 202 மதிப்பெண் பெற்றுள்ளதால், அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து விடும்.

முதல் டாக்டர்

மலசர் பழங்குடியின மாணவிகளில் முதல் டாக்டராகும் சாதனையையும் படைக்கிறார். சங்கவியின் தந்தை முனியப்பன் இறந்துவிட்டார். தாயார் வசந்தாமணி கண்பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி, தனது விடாமுயற்சியால் சாதித்து உள்ளார்.

சங்கவி நீட் தேர்வில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் அவர் வசிக்கும் கிராமத்தில் பிளஸ்-2 வரை படித்தவர் என்ற சிறப்பையும் பெற்றவர்.

இது குறித்து மாணவி சங்கவி கூறுகையில், ‘முதலில் 2018-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதினேன். அதில் 96 மதிப்பெண்கள் மட்டும் பெற்றேன். 2-வது முறையாக ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளேன். நான் டாக்டருக்கு படித்து கிராமப்புறத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story