லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது


லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது
x
தினத்தந்தி 3 Nov 2021 8:28 PM GMT (Updated: 3 Nov 2021 8:28 PM GMT)

ஓசூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டில் ரூ.2 கோடியே 6 லட்சத்தையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்களையும் கைப்பற்றினர்.

ஓசூர்,

வேலூர் மண்டல பொதுப்பணித்துறை அலுவலகம், வேலூரில் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இங்கு வேலூர் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயற்பொறியாளராக ஷோபனா (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணியை செயற்பொறியாளர் ஷோபனா மேற்கொண்டு வருகிறார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மேலும் கட்டுமான தொகைக்கான பில் தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதிக்கும் பணியிலும் ஷோபனா ஈடுபட்டு இருந்தார். இதற்காக ஒப்பந்ததாரர்களிடம் அவர் கணிசமான தொகையை லஞ்சமாக பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூரில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஷோபனாவிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலக அறையில் உள்ள ஓய்வு அறையில் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள காசோலை இருந்தது. அந்த காசோலையும் லஞ்சமாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கோடிக்கணக்கில் பணம்

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஷோபனா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 2 மணி வரை நடந்தது. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த 6 மணி நேர சோதனையில் வீட்டில் கட்டில், பீரோ, சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் அனைத்தும் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன.

தொடர்ந்து விசாரணை

மேலும் வீட்டில் இருந்து 11 வங்கி கணக்கு புத்தகங்கள், 35 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி நகைகள், ரூ.27 லட்சத்து 98 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகை (பிக்சட் டெபாசிட்) ஆவணங்கள், 14 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஷோபனாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story