வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில் 183 டி.எம்.சி. நீர் இருப்பு


வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழகத்தில் 90 நீர்த்தேக்கங்களில் 183 டி.எம்.சி. நீர் இருப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 11:43 PM GMT (Updated: 3 Nov 2021 11:43 PM GMT)

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 183 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் நிலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பூண்டி 87.19 சதவீதம், சோழவரம் 77.98 சதவீதம், புழல் 82.79 சதவீதம், தேர்வாய்கண்டிகை 94 சதவீதம், செம்பரம்பாக்கம் 77.15 சதவீதம் நிரம்பி உள்ளன.

அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை, வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்த்தனா, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் ஆகிய நீர்த்தேக்கங்கள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன.

தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத்துறை சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனுடைய மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும்.

தற்போது 1 லட்சத்து 83 ஆயிரத்து 130 மில்லியன் கன அடி (183.130 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. அதாவது 81.65 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமானால் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு மேலும் உயரும். எனவே அனைத்து நீர் நிலைகளுக்கும் வரும் நீரின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 38 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 138 நீர்பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 27 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 2 ஆயிரத்து 348 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,924 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2 ஆயிரத்து 835 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 4 ஆயிரத்து 274 ஏரிகள் 1 சதவீதம் முதல் 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளன. 730 ஏரிகள் எதிர்பார்த்த அளவு நீர் சேமிக்கப்படவில்லை.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story