சென்னை துறைமுக பொறுப்புக்கழக வைப்புத்தொகை ரூ.45 கோடி மோசடி: வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


சென்னை துறைமுக பொறுப்புக்கழக வைப்புத்தொகை ரூ.45 கோடி மோசடி: வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 4 Nov 2021 12:10 AM GMT (Updated: 2021-11-04T05:40:21+05:30)

சென்னை துறைமுக பொறுப்புக்கழக வைப்புத்தொகை ரூ.45 கோடியை முறைகேடு செய்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ.100 கோடியை நிரந்தர வைப்புத்தொகையாக வைத்திருந்தது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம், கணேஷ் நடராஜன் என்பவர் தன்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் நிதிப்பிரிவு துணை இயக்குனர் என அறிமுகப்படுத்திக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் அதே வங்கியில் நடப்புக்கணக்கு தொடங்கி உள்ளார்.

பின்னர், துறைமுக பொறுப்புக்கழகத்தின் நிரந்தர வைப்புத்தொகையான ரூ.100 கோடியில், ரூ.45 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரத்தை தனது பெயரில் தொடங்கிய நடப்புக்கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடிக்கு வங்கியின் கிளை மேலாளராக இருந்த சேர்மதி ராஜா உடந்தையாக இருந்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த மோசடி குறித்து இந்தியன் வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அவர்கள் 18 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்தகட்டமாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணையைத் தொடங்கும்.

Next Story