தீபாவளி மது விற்பனை ரூ.444 கோடி கடந்த ஆண்டைவிட ரூ.23½ கோடி குறைந்தது


தீபாவளி மது விற்பனை ரூ.444 கோடி கடந்த ஆண்டைவிட ரூ.23½ கோடி குறைந்தது
x
தினத்தந்தி 5 Nov 2021 11:02 PM GMT (Updated: 5 Nov 2021 11:02 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட ரூ.23 கோடியே 66 லட்சம் குறைவு. மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களை மது அருந்தி கொண்டாடுவதை மதுபிரியர்கள் விரும்புகின்றனர். எனவே பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே மதுபிரியர்கள் கூடுதல் உற்சாகமாகி விடுகின்றனர். இதனால் பண்டிகை காலங்களின்போது ‘டாஸ்மாக்’ கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மதுவிற்பனை விறுவிறுப்பாக இருந்தது. டாஸ்மாக் பார்களும் களைகட்டி இருந்தன.

மதுபிரியர்கள் உற்சாகம்

மது இல்லாமல் தீபாவளியா என்ற மதுபிரியர்களின் என்ணம் ஓட்டம், உற்சாக மிகுதி காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினமான 3-ந் தேதி அன்று ரூ.214 கோடியே 61 லட்சம், தீபாவளி பண்டிகை (4-ந் தேதி) அன்று ரூ.229 கோடியே 42 லட்சம் என 2 நாட்களில் மொத்தம் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ந் தேதி அன்று சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.47 கோடியே 21 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.44 கோடியே 27 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.43 கோடியே 38 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.41 கோடியே 75 லட்சம் என மொத்தம் ரூ.214 கோடியே 61 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று சென்னை மண்டலத்தில் ரூ.41 கோடியே 84 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.51 கோடியே 68 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.46 கோடியே 62 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.47 கோடியே 57 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.41 கோடியே 71 லட்சம் என மொத்தம் ரூ.229 கோடியே 42 லட்சத்துக்கு மது வகைகள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைவிட குறைவு

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினத்தில் ரூ.227 கோடியே 88 லட்சம், தீபாவளி பண்டிகை அன்று ரூ.239 கோடியே 81 லட்சம் என 2 நாட்களில் ரூ.467 கோடியே 69 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.23 கோடியே 66 லட்சம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story