மாமல்லபுரத்தில் அரசு கையகப்படுத்திய 5¼ ஏக்கர் நிலம்: பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்காததால் திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி


மாமல்லபுரத்தில் அரசு கையகப்படுத்திய 5¼ ஏக்கர் நிலம்: பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்காததால் திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 6 Nov 2021 12:00 AM GMT (Updated: 6 Nov 2021 12:00 AM GMT)

மாமல்லபுரத்தில் அரசு கையகப்படுத்திய 5¼ ஏக்கர் நிலம்: பொது பயன்பாட்டுக்கு உபயோகிக்காததால் திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழக அரசு பொதுபயன்பாட்டுக்காக கடந்த 1974-ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் 5.29 எக்டேர் நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர் அந்த நிலத்தில் ரூ.250 கோடி செலவில் உலகத்தரத்தில் கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் திட்டத்தைச் செயல்படுத்தாததால் நிலம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்து, நிலத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரி உரிமையாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘நிலத்துக்கான இழப்பீட்டுத்தொகையை வழங்கிவிட்டதாலும், நிலத்தை அரசு எடுத்துக்கொண்டதாலும் அதில் கோர்ட்டு தலையிட முடியாது' என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘நிலம் கையகப்படுத்தியது செல்லுபடியாகும்' எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம், நிலம் கையகப்படுத்தியதில் 47 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

Next Story