திராவிட கட்சியினர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை? வைகோ விளக்கம்


திராவிட கட்சியினர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை? வைகோ விளக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2021 4:22 PM GMT (Updated: 6 Nov 2021 4:22 PM GMT)

திராவிட கட்சியினர் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை? என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தீபாவளி

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளிக்கு திராவிட இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கு பா.ஜ.க. உள்பட சில அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன. மேலும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் (வைகோ) உள்பட திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறீர்களே? என்று கேட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

கொண்டாடுவது இல்லை

இதுதொடர்பாக வைகோ, ‘தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புராண பொய், மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிட இயக்கம் போராடி வந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பது அப்படியொரு புராண பொய்யின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதனால் நாங்கள் தீபாவளியை கொண்டாடுவது இல்லை.

தீபாவளி என்பது வட நாட்டினருக்கே உரித்தான, அவர்கள் கொண்டாடும் பண்டிகை. அது தமிழர்களுக்கான பண்டிகை அல்ல. பண்டைய தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதற்கான எந்த வரலாற்று சான்றுகளும் இல்லை.

தமிழர் பண்டிகை

இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார். கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார். இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள். அதனால் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கும், இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கும் நாங்கள் வாழ்த்து சொல்கிறோம்.

பொங்கல் பண்டிகை என்பது உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை. மேலும் அது உழவர் மற்றும் தமிழர்களின் திருநாள் ஆகும். ஏனெனில் அது தமிழருக்கே உரித்தான பண்டிகை. பண்டைய தமிழர்கள் காலத்தில் இருந்து நீண்ட நெடுங்காலமாக இன்று வரை கொண்டாடி வரும் பண்டிகையாகும். அதனால் தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். அதனால்தான் பொங்கல் பண்டிகைக்கு நாங்கள் வாழ்த்து கூறுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story