சென்னை எழும்பூரில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின: தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்


சென்னை எழும்பூரில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின: தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 7 Nov 2021 10:25 PM GMT (Updated: 2021-11-08T03:55:12+05:30)

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தன. மேலும் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர் சென்றனர்.

இந்த நிலையில் விடுமுறையின் கடைசி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலர் மீண்டும் சென்னைக்கு திரும்பினர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையிலும் கூட பலர் ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர். மழையின் தாக்கம் தொடர்ந்து இருந்ததால் ரெயில் ஓட்டுனர்களை மிதமான வேகத்தில் ரெயில்களை இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ரெயில்கள் மித வேகத்துடனே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடர் மழை பெய்ததில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை 1 முதல் 3 வரை உள்ள தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தை இணைக்கும் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கின.

தென் மாவட்ட ரெயில்கள்

இதையடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கமாக முதல் 2 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மாற்று நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது. இதனால் வழக்கமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாகின. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு தென் மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய ரெயில்களான ராமேஸ்வரம், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி ஆகிய ரெயில்கள் தாமதமாக வந்தன.

ஒரு ரெயில் வெளியே சென்றவுடன் அடுத்த ரெயில் உள்ளே வரும் சூழல் ஏற்பட்டதால், மற்ற ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். வழக்கமாக எழும்பூர் வரும் நேரத்தை விட 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதால் ரெயிலில் குழந்தைகளை கொண்டு வந்த பெற்றோர்கள், சர்க்கரை நோயாளிகள் காலை உணவுக்கு தாமதமானதால் சிரமத்துக்கு ஆளாகினர். சில ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட 3 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது.

மின்சார ரெயில் சேவை

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் நேற்று மதியம் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வந்த மின்சார ரெயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

தண்டவாளத்தில் இருந்த நீர் அகற்றப்பட்டு, மீண்டும் நேற்று மதியம் 12 மணி அளவில் மின்சார ரெயில் சேவை கடற்கரை ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.

Next Story