நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறப்பு


நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறப்பு
x
தினத்தந்தி 7 Nov 2021 11:11 PM GMT (Updated: 7 Nov 2021 11:11 PM GMT)

தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 11 மணி நிலவரப்படி ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 5,561 கனஅடி வந்து கொண்டிருந்தது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக ஏரியில் இருந்து வினாடிக்கு 480 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நேற்று காலை வினாடிக்கு 3,870 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதுபடிப்படியாக 4,834 கனஅடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 3,895 கன அடியாகவும், ஏரியின் நீர்மட்டம் 34.22 அடியாகவும், ஏரியில் தண்ணீர் இருப்பு 2.889 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறங்களிலும் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆற்றம்பாக்கம், நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கன் தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிகாவநூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கள்ளிப்பாளையம், வன்னிபாக்கம், அசுவன்பாலயம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, இடையஞ்சாவடி, மணலி, மணலிபுதுநகர், சடயான்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புழல் ஏரி

அதேபோல் 3,300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி நேற்று காலை 2 ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது.

ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய் வழியாக செங்குன்றம் சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், மணலி, சடயங்குப்பம்வழியாக எண்ணூர் கடலை சென்றடைகிறது. தண்ணீர் திறப்பின்போது மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனம், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று காலையில் 600 கன அடியாக இருந்த நீர்வரத்து பின்னர் படிப்படியாக 1,590 கன அடியாக உயர்ந்தது. தற்போது ஏரியின் நீர் மட்ட உயரம் 21.45 அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 1,590 கன அடியாகவும், ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும், தற்போது 2,996 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு 5 கண் மதகில் பூஜைகள் செய்யப்பட்டு 2-வது ஷட்டர் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நீர் வரத்து அதிகரித்ததால் 4-வது செட்டர் வழியாக மேலும் 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு 2,095 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடையாறு ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அமைச்சர் தா.ேமா.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஆகியோர் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகளும் நிரம்பி வருவதால் அங்கிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூடுதலாக நீர் வரத்து இருக்கும். ஏரிக்கு நீர் வரத்து எவ்வளவு வருகிறதோ அதற்கு ஏற்ப செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உபரி நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் உள்ளே வராத வகையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் அனைத்து பகுதி களிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story