டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை


டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை
x
தினத்தந்தி 8 Nov 2021 11:56 PM GMT (Updated: 8 Nov 2021 11:56 PM GMT)

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்த குழு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகளிடம் இன்று ஆய்வு நடத்த உள்ளது.

சென்னை,

இந்தியாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் மத்திய அரசின் சுகாதார குழு ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, மண்டல இயக்குனர் டாக்டர் ரோஷிணி தலைமையில், டாக்டர் நிர்மல் ஜோ, டாக்டர் ஜான்சன் அமலா ஜஸ்வின் ஆகிய 3 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னை வந்தது.

இந்த குழுவினர் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து அறிந்துகொள்ள 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எங்கு இருக்கிறதோ, அங்கு சென்று ஆய்வு செய்தும், மருத்துவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் இந்த குழு அறிந்துகொள்ளும்.

நோயாளிகளிடம் இன்று ஆய்வு

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் கூட்டம் நடத்தி, டெங்குவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார். இதுகுறித்து சிறப்பு குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நாளை (இன்று) ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று டெங்குக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வார்கள். மத்திய அரசின் பிரதிநிதிகள் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்று, டெங்கு தொடர்பான நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

493 பேர்

சென்னையில் இன்று (நேற்று) நிலவரப்படி டெங்குவால் 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 30 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story