அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கனிமொழி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கனிமொழி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:20 AM GMT (Updated: 9 Nov 2021 12:20 AM GMT)

தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் மீது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திண்டிவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி, அ.தி.மு.க. ஆட்சி குறித்தும், அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் கருத்து தெரிவித்து பேசினார்.

அதையடுத்து கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கனிமொழி நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கனிமொழி வழக்கு தொடர்ந்தார்.

அரசாணை

அதில், தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, கனிமொழி தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறினர்.

வழக்கு ரத்து

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி நிர்மல்குமார், மனுதாரர் கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோல மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story