கனமழை எச்சரிக்கை எதிரொலி: வட கடலோர மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


கனமழை எச்சரிக்கை எதிரொலி: வட கடலோர மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 Nov 2021 8:15 PM GMT (Updated: 9 Nov 2021 8:15 PM GMT)

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்யும் கனமழைக்கு எச்சரிக்கையாக, வட கடலோர மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை,

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மழை நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் 9-ந்தேதிவரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவைவிட 46 சதவீதம் கூடுதலாகும்.

வங்க கடலில் 9-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பின்பு 20 செ.மீ. மேல் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. எனவே அவசியம் இல்லாமல் மக்கள் 2 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்.

5 பேர் மரணம்

முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 2,649 பேர் 75 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மழையால் தேனி, திருச்சி, மதுரை, சென்னை மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்தனர். 64 கால்நடைகள் இறந்தன. வீடு, குடிசைகளும் சேதமடைந்து உள்ளன.

மழையால் ஏற்பட்ட சேதங்கள் உடனடியாக சீர்செய்யப்படுகின்றன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற படகுகளில், 45 படகுகள் தவிர அனைத்து படகுகளும் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. இந்த 45 படகுகளில் உள்ள 250 மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 23 படகுகள் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினத்திற்கும், 22 படகுகள் தமிழ்நாட்டிற்கும் இரவிற்குள் பத்திரமாக கரை சேர்ந்துவிடும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, 16 நிவாரண முகாம்களில் 1,343 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புக்கு...

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 12-ந் தேதிவரை வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. சென்னை மாநகராட்சியை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். டி.என்.ஸ்மார்ட் இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story