மத்திய நீர்வள ஆணையம் உத்தரவுக்கேற்ப முல்லை பெரியாறு அணையில் விதிகளின்படி நீர் திறக்கப்பட்டது


மத்திய நீர்வள ஆணையம் உத்தரவுக்கேற்ப முல்லை பெரியாறு அணையில் விதிகளின்படி நீர் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 9 Nov 2021 8:21 PM GMT (Updated: 9 Nov 2021 8:21 PM GMT)

மத்திய நீர்வள ஆணையம் நிர்ணயித்த நீர்மட்ட அளவின்படி முல்லை பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்டது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

முல்லை பெரியாறு அணையில் எந்தெந்த தேதியில் எவ்வளவு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை அடிப்படையாக கொண்டு நீர்மட்ட அளவுகளை மத்திய நீர்வள ஆணையம் நிர்ணயம் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு அணைக்கும் எவ்வளவு தண்ணீர் இருக்க வேண்டும்? என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் 29-ந்தேதி தமிழக நீர்வள அலுவலர்களால் அணையின் நீர் திறக்கப்பட்டது.

142 அடி தேக்கப்படும்

நீர்மட்ட அளவுகள் குறித்த விதிமுறைகள் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. எனவே நாங்கள், கேரள மந்திரிகளை அழைத்து வந்து யாரையும் கேட்காமல் திறந்து விட்டோம் என்று குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் சட்டப்படி தான் தண்ணீரை திறந்து விட்டோம்.

வரும் 30-ந்தேதி மழைக்காலம் முடியும்போது 142 அடி நீரை தேக்கலாம் என்று நீர்மட்ட அளவை கணக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி நீர் தேக்கப்படும்.

மரம் வெட்ட அனுமதி

கேரள மாநில வனத்துறை துணை இயக்குனர் ஏ.டி.சுனில் பாபு, முல்லை பெரியாறு அணையின் செயற்பொறியாளருக்கு 6-ந்தேதியன்று ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில், பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள வனத்துறையின் முதன்மை வன பாதுகாவலர் பெஞ்சமின் தாமஸ், இதற்கான உத்தரவை 5-ந்தேதி வழங்கினார். எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும்? என்று 15 மரங்களின் பெயர் பட்டியலையும் இணைத்திருந்தார்.

அரசியல் செய்வதா?

இந்த தகவலை நமது முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம். அதற்குள் கேரள வனத்துறை மந்திரி இதுகுறித்து எங்களுக்குத் தெரியாது என்று கூறுகிறார். மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினை தொடர்பாக மந்திரிக்கு தெரியாமல் ஒரு அதிகாரியால் பிற மாநிலத்திற்கு கடிதம் எழுத முடியுமா?

மந்திரியின் ஒப்புதலோடுதான் அக்கடிதத்தை அனுப்பினோம் என கேரள வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கேரள நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இது அம்மாநில அரசு அலுவலர்களுக்கும், மந்திரிக்கும் இடையிலான விஷயம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். இதில் சிலர் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story