மழை வெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை


மழை வெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை
x
தினத்தந்தி 9 Nov 2021 10:01 PM GMT (Updated: 9 Nov 2021 10:01 PM GMT)

மீட்பு பணிக்கு 75 ஆயிரம் போலீசார் தயார்நிலை:மழை வெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும்போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை.

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை மற்றும் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் 10-ந்தேதி (இன்று), 11-ந்தேதி (நாளை) மற்றும் 12-ந்தேதி (நாளை மறுதினம்) மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் போலீஸ் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல்படை போலீசார், ஊர்க்காவல்படை வீரர்கள் என 75 ஆயிரம் பேர் மீட்பு பணிக்கு தயார்நிலையில் உள்ளனர்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் வருமாறு:-

* பொதுமக்கள் அனைவரும் இடி-மின்னல், பெருமழை சமயங்களில் வீட்டுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

* ஆறு, ஓடைகளில் வெள்ளம் செல்லும்போது தரைப்பாலங்களின் மேல் கடக்கக் கூடாது.

* குடியிருப்புகளில் கீழ்தளத்தில் வசிக்கும் மக்கள் மின்னணு சாதனங்களை மேல்தளத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* சாலை பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும். எனவே அதிகாலை வேளையில், இருட்டான நேரத்தில் வெளியே செல்ல கூடாது.

* இடி-மின்னல் ஏற்படும் நேரங்களில் மரத்தடி மற்றும் உயர்ந்த கோபுரங்கள் கீழ் நிற்கக்கூடாது.

* டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்களை அணைத்துவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் ‘வீடியோ’ வாயிலாகவும் அறிவுரை வழங்கி உள்ளார்.

Next Story