‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை முடக்க அவதூறு பரப்புகிறார்கள் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை முடக்க அவதூறு பரப்புகிறார்கள் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Nov 2021 11:44 PM GMT (Updated: 9 Nov 2021 11:44 PM GMT)

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை முடக்குவதற்காக அவதூறு பரப்புகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். 2-வது நாளாக நேற்று வடசென்னை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

வால்டாக்ஸ் சாலை, யானை கவுனி போலீஸ் நிலையம் அருகே உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நல உதவிகள்

அதனைத்தொடர்ந்து தங்கசாலை, திருவொற்றியூர் சாலை, வைத்தியநாதன் மேம்பாலம், எம்.ஜி.ஆர். நகர், எழில் நகர், முல்லைநகர் பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் மூலக்கடை, சிம்சன், பல்லவன் சாலை, பேப்பர் மில் சாலை, அன்னை சத்யா நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் பாபாநகர் பகுதியில் வெள்ளம் தேங்கி இருந்த பகுதிகளை அவர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நல உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. தி.மு.க. அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் அதிகாரிகளே சென்று பார்க்கவில்லை என்று பொதுமக்களே குற்றம் சாட்டியுள்ளனர். 3 நாட்கள் ஆகியும் வெள்ளம் வடியவில்லை. உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே தி.மு.க. அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான் சென்னை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தது. அ.தி.மு.க. ஆட்சியில் மழைக்காலங்களில் எங்கெங்கு மழை நீர் தேங்கியுள்ளதோ அங்கு சென்று நடவடிக்கை எடுத்தோம். மழைநீரை அகற்றினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை.

406 கி.மீ. அடையாறு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூவம் முகத்துவாரம் தூர்வாரப்பட்டதால் மழைநீர் இப்போது வடிந்து செல்கிறது.

மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

வடசென்னையில் தண்ணீர் அதிகமாக தேங்காமல் இருப்பதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம். ஆனால் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்திருக்கிறார், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் தலைமையில் இருக்கிற தி.மு.க. அரசு வெள்ள நீர் வடிய எதுவும் செய்யவில்லை. நாங்கள் வந்த பிறகுதான் வெள்ள நீர் வடிவதற்கான பணிகளை மேற்கொண்டோம்.

‘ஸ்மார்ட் சிட்டி’ மூலமாகத்தான் மழைநீர் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் கொண்டு வந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். இந்த திட்டத்தை முடக்க பார்க்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம்தான் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.18 கோடி மதிப்பில் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டது. வில்லிவாக்கம் பாபாநகரில் ரூ.65 கோடியில் மழைநீர்வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. நீரேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுத்தோம். அதற்குதான் மு.க.ஸ்டாலின் இப்போது அடிக்கல் நாட்டியுள்ளார். மழைநீரை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு வாழ்வாதார பிரச்சினை. கேரள மந்திரிகள் தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை திறப்பது வருந்தத்தக்கது. அந்த உரிமையை விட்டு கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்தும் தான் 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். தேனியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் மற்ற பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் பாலங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story