2015-ம் ஆண்டு மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பின்னரும் சென்னை மாநகராட்சி என்ன செய்கிறது? ஐகோர்ட்டு கண்டனம்


2015-ம் ஆண்டு மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பின்னரும் சென்னை மாநகராட்சி என்ன செய்கிறது? ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 10 Nov 2021 12:22 AM GMT (Updated: 10 Nov 2021 12:22 AM GMT)

2015-ம் ஆண்டு மழை வெள்ளத்துக்கு பின்னர் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, மழை வெள்ள பாதிப்புகளை ஒரு வாரத்தில் சரிசெய்யாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது, சென்னை மாநகரில் சாலைகள் விரிவாக்கம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பின்னர், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாய் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும், தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின்னர் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒரு வாரத்துக்குள் நிலைமை சீராகவில்லை என்றால், இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை செய்தனர்.

அதிகாரிகள் அலட்சியம்

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் பகுதியில் உள்ள ஏரியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தமிழரசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டுவருகின்றனர். நீர்வழிப் பாதைகளில் தடைகள் எதுவும் இருக்கக்கூடாது. வெள்ளநீர் வடியும் வகையில் நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

நல்ல பாடம்

மேலும், ‘சென்னை மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிக்கின்றனர். இந்த மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், மனுதாரரின் கோரிக்கையை 10 வாரத்துக்குள் பரிசீலித்து, திருக்கோணம் ஏரி மட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் கலெக்டர் அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story