14-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Nov 2021 10:39 PM GMT (Updated: 10 Nov 2021 10:39 PM GMT)

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-ல் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் மருத்துவ முகாம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மூலம் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கின்ற சூழலில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டு, அங்கு மக்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்பத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 1,858 இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் 965 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 74 ஆயிரத்து 283 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் கூடுதலாக இன்று (நேற்று) 400 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

750 வாகனங்கள் மூலமும் மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் 1,150 நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட தொடங்கி உள்ளன. மழைக்காலங்களில் ஏற்படுகிற பாதிப்புகளுக்கு மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக ரூ.120 கோடி செலவில் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். மேலும், குடிப்பதற்கு பயன்படுத்துகிற எந்த தண்ணீராக இருந்தாலும், அதில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுவரை மக்களைத்தேடி மருத்துவம் மூலம் 34 லட்சத்து 57 ஆயிரத்து 392 பேர் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை அரசின் சார்பில் 5 கோடியே 73 லட்சத்து 30 ஆயிரத்து 450 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளின் சார்பில் 26 லட்சத்து 82 ஆயிரத்து 556 பேருக்கும் என மொத்தம் 6 கோடியே 13 ஆயிரத்து 6 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-வது தவணை தடுப்பூசி 32 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. 8-வது தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்தாலும் மெகா தடுப்பூசி முகாமை நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறோம்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல்லை, தென்காசியில் டெங்கு பாதிப்பு கூடுதலாக இருக்கின்ற காரணத்தால், அங்கு டெங்குவுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மையத்தை ஐ.சி.எம்.ஆர் சார்பில் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

மழைக்காலத்துக்கான சிறப்பு சிகிச்சைகளை அளிக்க, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 165 இடங்களில் மக்களை தங்க வைக்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 44 இடங்களில் மட்டுமே மக்கள் வருகை தந்தனர். 1,303 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் சேவைகளும் மிக சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றது. நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 45 ஆயிரம் அழைப்புகள் வந்தன” என்று அவர் கூறினார்.

Next Story