காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Nov 2021 10:02 PM GMT (Updated: 11 Nov 2021 10:02 PM GMT)

காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

சென்னை,

மழை பாதிப்பால் கிடுகிடுவென உயர்ந்துள்ள தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வேளாண்மைத்துறையில் 3 கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறோம்.

அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி அந்த விவரங்களை அனுப்ப கேட்டுள்ளோம். இதுவரை தமிழகத்தில் சம்பா சாகுபடி 44 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்றுள்ளது. அதில், 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நிலப்பரப்பு மழையில் மூழ்கி விட்டது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்து தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதுபற்றி கணக்கெடுப்பு நடைபெறும். எங்காவது 33 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதா? அதற்கான நிவாரணம் என்ன? என்பது ஒரு சில நாட்களில் தெரியும்.

தோட்டக்கலை பயிர்கள் 31 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நீரில் மூழ்கிவிட்டது. அதன் நிலமை வெள்ள நீர் வடிந்த பின்னர்தான் தெரியும்.

இதுபற்றி அறிந்து கொள்வதற்கான அமைச்சர் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் உடனடியாக டெல்டா மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகள், விளை நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை நேரடியாக அதிகாரிகளுடன் சென்று பார்வையிடுவார்கள். அங்கு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக முதல்-அமைச்சருக்கு அறிக்கை அளிப்பார்கள். தமிழகத்தில் உடனடியாக வழங்கப்படும் நிவாரணம் குறித்து முதல்-அமைச்சரே அறிவிப்பார்.நிவாரணம் குறித்த கணக்குகளை முதல்-அமைச்சரிடம் அமைச்சர் குழு ஒப்படைக்கும். நிவாரணம் உடனடியாக மக்களுக்கு போய் சேரவேண்டும் என்பதற்காகவே அமைச்சர் குழு அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் என்னென்ன வகையிலான நிவாரணம் வழங்கப்படும் என்பதை முதல்-அமைச்சர் அறிவிப்பார். மத்திய அரசின் நிவாரணம் என்பது பின்னர் நிகழும்.

மழையின் தாக்கத்தினால் விவசாயிகள் வேலைக்கு செல்ல முடியவில்லை. உற்பத்தி செய்த பொருட்களை சந்தைக்குக் கொண்டு வரவேண்டும். தக்காளி விலை ஏறிவிட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அது 2 நாட்களில் அழுகிவிடும் பொருள். என்றாலும், காய்கறிகளின் விலை குறைய நடவடிக்கை எடுப்போம். முன்புபோல் இல்லாமல், தற்போது இயற்கை சூழல் மாறி தற்போது எல்லா இடங்களிலுமே மழை பெய்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 48 ஆயிரம் வாகனங்கள், நடமாடும் கடைகள் மூலமாக காய்கறிகள், மளிகைப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். இப்போது அதற்குரிய நிலமை இல்லை. என்றாலும், உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

பயிர் காப்பீட்டிற்காக இம்மாதம் 9-ந் தேதிவரை 10 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். கடந்த ஆண்டைவிட 1.44 லட்சம் பேர் கூடுதலாக பிரிமியம் தொகை செலுத்தியுள்ளனர். 15-ந் தேதிவரை காப்பீடு செய்ய அவகாசம் உள்ளது என்று அவர் கூறினார்.

Next Story